தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினை மானாவாரியாக புகழும் ராமதாஸ்,.! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி.! 

Malaimurasu Seithigal TV

கொரோனா பரவலை பிற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக கையாண்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை பாராட்டியிருக்கிறார். திமுகவையும் ஸ்டாலினையும் தொடர்ந்து ராமதாஸ்  புகழ்ந்து வருவது அதிமுக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள அவர் "இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மராட்டியத்தில் தொடங்கி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒதிஷா, மேற்குவங்கம் ஆகிய கடலோர மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடும்படியாக இல்லை!"


"பெங்களூருடன் ஒப்பிடும் போது  சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கு ஊரடங்கும் ஒரு காரணம். இதை சாத்தியமாக்கிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.  தொடர்ந்து விழிப்பாக பணியாற்ற வேண்டியதும் அவசியமாகும்!" எனக் கூறியுள்ளார். 

மேலும் தனது நேற்றைய பதிவிலும் "கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்; 18 வயதில் வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது  வரவேற்கத்தக்கது. இது அவர்களுக்கு சிறந்த சமூகப்பாதுகாப்பை அளிக்கும்!" எனக் கூறி ஸ்டாலினை பாராட்டியிருந்தார்.

இந்நிலையில்,கொரோனா பரவலை சிறப்பாக கையாளவில்லை என்று கூறி அதிமுக தலைவர்கள் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வரும் நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக  திமுகவையும் ஸ்டாலினையும் தொடர்ந்து புகழ்ந்து வருவது அதிமுக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மற்ற கட்சிகளை விட அதிமுக பாமகவுக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ராமதாஸின் மகனான அன்புமணியை நாடாளுமன்ற எம்.பியாக அனுப்பியது. பாமகவுக்காக தேமுதிகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டது. பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்து பிற சமூகத்தினரின் அதிருப்தியை சந்தித்தது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பெரும் பின்னடைவை சந்தித்தது.

இப்படி பாமகவுக்காக பார்த்து பார்த்து செய்த அதிமுகவை புறக்கணித்து திமுகவை இப்படி தொடர்ந்து புகழ்ந்து வருவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.