ramadoss with gk mani 
தமிழ்நாடு

“ ராமதாஸை தற்பொழுது பொம்மையாக மாற்றி ஜி.கே.மணி வைத்துள்ளார்” - வழக்கறிஞர் பாலு சரமாரி குற்றச்சாட்டு!

பொதுக்குழு தீர்மானங்களை குப்பைத் தொட்டியில் தான்....

மாலை முரசு செய்தி குழு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சேலத்தில் ராமதாஸ் தலைமையில் நேற்று பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவராக மீண்டும் ராமதாஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் கட்சியின் செயல் தலைவராக ராமதாஸின் மகள் ஸ்ரீ காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த சூழலில், சேலத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அன்புமணி மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு, 

“சேலத்தில் நடைபெற்றது பொதுக்குழு செயற்குழு அல்ல அது கேலிக்கூத்தானது. பாமக பிரச்சனையை பற்றி பேசுவதற்கு முன்பாக ஒரு அரசியல் கட்சியின் செயற்குழு பொதுக்குழு எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம் உள்ளது. ஆனால் முதல்முறையாக செயற்குழுவும் பொதுக்குழுவும் ஒரே இடத்தில் நடப்பது இதுதான் முதல் முறை என்றார். 

தொடர்ந்து பேசிய அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள் என நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. ஆனாலும் இவர்கள் நீதிமன்றத்தை நாடாமல் பொதுக்குழுவை கூட்டுகிறோம், செயற்குழுவை கூட்டுகிறோம் என்று கேலிக்கூத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என குற்றம் சாட்டிய அவர் இந்த பொதுக்குழு மூலமாக சொல்வது ஒரு காலத்திலும் இவர்களால் பாமகவின் தலைவராகவோ அல்லது உறுப்பினராக கூட ஆக முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள். இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் முரணானவை. எங்களுடைய பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஆனால் இவர்கள்,  நடத்தியது அபத்தம் காமெடி கேலிக்கூத்து என எல்லாவற்றிற்கும் உதாரணமாக உள்ளது. 

ராமதாஸ் தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும், என கூறிய பாலு, பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணியை எப்படி பாமக பொதுக்குழு செயற்குழுவால் நீக்க முடியும் இது கூட அவர்களுக்கு தெரியவில்லை. 

திமுக சொல்லியதை ஜிகே மணி செய்கிறார் சிங்கம் போன்று இருந்தவர் மருத்துவர் ராமதாஸ், ஆனால் இன்றைக்கு அவரை பொம்மை போல் மாற்றி வைத்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப் போகிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை என கூறிய பாலு, பொதுவெளியில் எங்கள் தலைவர் அன்புமணியை பற்றி ஒருமையில் பேசுவதை ஸ்ரீ காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் எங்கள் தலைவரை பற்றி கேள்வி எழுப்புவதற்கு முன்பாக இத்தனை நாட்கள் ஸ்ரீ காந்தி எங்கு இருந்தார்” என கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய பாலு 2009 -ஆம் ஆண்டு தான் பாமக தனது அங்கீகாரத்தை இழந்தது. அப்போது தலைவராக இருந்தவர் ஜி.கே மணி அப்போது கூட்டணிகளை முடிவு செய்தவர் ராமதாஸ். இப்படி இருக்கையில் அங்கீகாரத்தை இழப்பதற்கு அன்புமணி காரணம் எனக் கூறுவது எந்த வகையில் நியாயம்.. 

கூட்டணி குறித்து ராமதாஸ் தலைமையில் இருக்கும் அணியிடம் யாரும் பேசவில்லை. அதனால்தான் அவர்கள் பொதுக் குழுவில் கூட்டணி குறித்து அறிவிப்பார் ஐயா என்று கூறிவிட்டு தற்போது அதனை அவர்கள் அறிவிக்கவில்லை என்றார். மேலும் ஜிகே மணி அறிவாலயம் என்ன சொல்கிறதோ அதை செய்கிறார் ஜி.கே மணியின் பின்னணியில் திமுக தான் இருக்கிறது தைலாபுரம் அறிவாலயத்தில் கிளையாக செயல்படுகிறது என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.