தமிழ்நாடு

மீனவர்கள் மீதான அத்துமீறல்கள் தடுக்க வேண்டி அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்..!

Tamil Selvi Selvakumar

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிய நிகழ்வு மீனவ மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேர், அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கும் தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள், நமது மீனவர்களை கத்தியால் தாக்கியதுடன், சுமார் 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதில் காயம் அடைந்த மீனவர்கள் மணியன், கோடிலிங்கம் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதனிடையே, தமிழக மீனவர்கள் மீதான தொடர் அத்துமீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என பாம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 முறை நமது மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுவும், இந்திய கடல் எல்லையில் இந்த அத்துமீறல் நடைபெற்றிருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு கடிதம் நின்றுவிடாமல், பன்னாட்டு காவல்துறை உதவியுடன் இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.