தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 1979-ம் ஆண்டு வெளியான 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன. அந்த வகையில், விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு 'கேப்டன்' என்ற அடைமொழி கிடைத்தது. இந்த படத்தில் மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தின் மைல்கல் திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மீண்டும் திரைக்கு புதுப்பொலிவுடன் இன்று வெளிவந்தது.
‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் காட்சியை கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள திரையரங்கில் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தனர். பேண்ட் வாத்தியங்கள் முழங்க திரையரங்குக்குள் அவர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில் இந்த படம் துவக்கம் முதல் கைதட்டி ரசித்து பார்த்தார்கள். முதல் முறையாக விஜயகாந்த் சண்டைக் காட்சியில் தோன்றிய போது பிரேமலதா விஜயகாந்த் கதறி அழு துவங்கினார். அப்போது அவரை விஜய பிரபாகரன் மற்றும் சுதீஷ் ஆகியோர் ஆசிவாசப்படுத்திய நிலையில் தொண்டர்களும் அழ வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவிடம் தவெக மாநாட்டில் விஜயகாந்தை குறிப்பிட்டு விஜய் பேசியிருப்பது சார்ந்து கேள்வி எழுப்பப்பட்டது.
"அவர் கேப்டனை அண்ணன் என்று அழைத்து தம்பி என்கிற எண்ணத்தில் பேசியிருக்கிறார். அவர் எப்போதும் எங்கள் வீட்டு பையன்தான். பல்வேறு படங்களில் கேப்டனின் சிறுவயது கேரக்டர்களை விஜய்தான் பண்ணியிருக்கிறார். எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கேப்டனுக்குமான உறவு என்பது மிக ஆழ்மனது. கேப்டனை வைத்து 17 படங்களை அவர் இயக்கியிருக்கிறார். எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் அவர்களுடையது. விஜய்யின் படத்துக்கு கூட கேப்டனின் ஏஐ பயன்படுத்த அனுமதி கொடுத்தோம். ஒரு வாரத்துக்கு முன்னாடி அனுமதி இல்லாமல் கேப்டனின் புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தேன்.அதற்கு காரணம் கேப்டன் எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். அந்த மாதிரி விஜய்யும் சொல்லட்டும். இப்போது அண்ணன் என்று சொல்லியிருக்கிறார், பாப்போம். உடனே கூட்டணி குறித்து கேட்காதீர்கள், ஜனவரி மாநாட்டில் தான் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் - என பிரேமலதா பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.