தமிழ்நாடு

உயர்கிறது ஆட்டோ கட்டணம் ? புதிய கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை தமிழக அரசுக்கு பரிந்துரை!

தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யும் வகையில் புதிய கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Tamil Selvi Selvakumar

தமிழகத்தில் 2013ம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்தது. அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாய் கட்டணம் என்று இருந்தது. 

அத்துடன், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் எனவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டது. கருத்துக்களை கேட்டுள்ள இணை போக்குவரத்து ஆணையர் தலைமையிலான குழு புதிய கட்டண உயர்வு குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி ஆட்டோவிற்கு முதல் 1.5 கிலோமீட்டர் தொலைவிற்கு கட்டணமாக ரூபாய் 40 கட்டணமாகவும், கூடுதலான ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 18 உயர்த்தலாம் எனவும் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து குழுவின் புதிய கட்டண உயர்வு குறித்த பரிந்துரையை பரிசீலித்து இறுதி முடிவை அரசு எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.