தமிழ்நாடு

நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி...  இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை தமிழக கடலோரப் பகுதியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்பதால் இந்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு மழையின் தொடக்கத்தில் உருவான முதல்  காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக பெரு மழையுடன் சென்னையை வெள்ளக்காடாக்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையை விட கூடுதலாக மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகள் மழை நீரில் மிதக்கிறது. இதற்கிடையேதான்,  இரண்டாவதாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது, அதனால் இன்று, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும்  பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இது தவிர திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும். அதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. 

நாளைய நிலவரப்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.