தமிழ்நாடு

3 மணி நேரத்திற்கு பிறகு சீரான மெட்ரோ ரயில் சேவை...!

Tamil Selvi Selvakumar

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 3 மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது. 

சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்துக்கான சாதனங்களில் மிகப்பெரிய பங்கு வகிப்பது மெட்ரோ ரயில் சேவை. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சின்னமலை ரயில் நிலையத்தில் இருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை ஒற்றைப் பாதையில் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் விம்கோ நகர் பணிமணையில் இருந்து நீல நிற வழித்தடத்தில் உள்ள சின்னமலை ரயில் நிலையம் வரை வழக்கமான சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம் வழக்கமான ரயில் சேவைகள் பச்சை நிற வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.  அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே ஷார்ட் லூப் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறை 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அதிகாரிகள் சரி செய்ததால், வழக்கம் போல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.