தமிழ்நாடு

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் நிவாரணம்...முதலமைச்சர் அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

டெல்டா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

”கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ், இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள முதலமைச்சர், மன்னார்குடியில் நடைபெற்ற திமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், திருமண சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது திமுக ஆட்சியில் தான் என பெருமிதம் தெரிவித்தார். 

மக்கள் போற்றும் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதாகவும், தேர்தல் வாக்குறுதிகளில் முக்கால் வாசி நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், டெல்டா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

இதனை தொடர்ந்து மன்னார்குடியில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலையத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலையம் குறித்தும், அதற்கான பணிகள் குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.