தமிழ்நாடு

அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் அகற்றம்...!

Tamil Selvi Selvakumar

கரூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் "என் மண் - என் மக்கள்" நடை பயண பிரச்சாரம் இன்று கரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ளது. முன்னதாக, நேற்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் தொடர்ந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக, திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது. ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த திமுவை சேர்ந்த கரூர் மேயர் கவிதா கணேசன், அப்பகுதியில் வைக்கப்பட்ட பிளக்ஸ் மற்றும் பேனர்களை அகற்ற மாநகராட்சி ஊழியருக்கு உத்தரவிட்டார், அதனை தொடர்ந்து ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த அண்ணாமலை நடைப்பயண பிரச்சார பிளக்ஸ் பேனர்கள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.

இதனையடுத்து, அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.