தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் - நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

Malaimurasu Seithigal TV

அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டிக் கொடுப்பதை கட்டாயமாக்கக் கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புருசோத்தமன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் அவற்றை ஆசிரியர்களின் நலனுக்காக அவற்றை பயன்படுத்துவதில்லை என கூறியுள்ளார்.  ஆசியர்களுக்கு குறைவான ஊதியம் அளிப்பதோடு, வசூலிக்கப்படும் கட்டணத்தை மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

அதனால், ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புக்களை கட்டிக் கொடுப்பதை கட்டாயமாக்க  மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், ஆசிரியர்கள் குடியிருப்புகள் கட்ட தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்யவும், வீடு வாங்க விரும்பும் ஆசிரியர்களுக்கு மானியம் வழங்கவும், வட்டியில்லா வீட்டுக்கடன் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.