தமிழ்நாடு

அலட்சியம் வேண்டாம் மக்களே... ஆபத்திலிருந்து தப்பிக்க தடுப்பூசி போடுங்க...

13வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று 60 ஆயிரம் இடங்களில் நடத்தப்படுகின்றது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு 12 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வைரஸ் என்ற வடிவில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி ஓரளவு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், 13வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று மொத்தம் 60 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஆயிரத்து 600 முகாம்களுடன் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட உள்ளன. கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.