தமிழ்நாடு

10 ஆம் வகுப்பு மாணவர்களில் குறைவான தேர்ச்சி விகிதம்....? பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு...?

Malaimurasu Seithigal TV

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைகள், பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வில் மாணவர்கள் வருகை, ஆசிரியர்களின் வருகை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டு பாடம் உள்ளிட்டவை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

அதன்படி, இந்த ஆய்வின் முடிவில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் அதன் செயல்பாடு குறித்த முடிவுகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உதவிக் கல்வி அலுவலர் வாயிலாக வழங்கப்படும்.

நடந்து முடிந்த ஆய்வுக் கூட்டத்தில், சமீபத்தில் நடந்த இரண்டாம் பருவத் தேர்வுக்கான முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி பத்தாம் வகுப்புத் தேர்வில் 85 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற பாடப்பிரிவின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டமானது நாளை அம்மா மாளிகையில் நடைபெற உள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 85 சதவீதத்திற்கும் மாணவர்கள் குறைவாக தேர்ச்சி பெற்றதற்கான காரணத்தையும், அதற்காக பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளையும் இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.