தமிழ்நாடு

மணிப்பூரில் கலவரம் - தமிழர்கள் வாழும் பகுதியில் பதற்றம்....! 5 மாணவர்கள் இன்று சென்னை வருகை...!

Tamil Selvi Selvakumar

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தினருக்கும், பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியுள்ளது. மணிப்பூரில் வசித்து வரும் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழங்குடி மாணவர் அமைப்பு சார்பில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி  நடத்தப்பட்டது. மாணவர்கள் அமைப்பு நடத்திய பேரணிக்கு பழங்குடி அல்லாதோர் எதிர்ப்பு பேரணி நடத்திய நிலையில், செளரசந்திரபூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில் மலையோர மாவட்டங்களில் வீடுகள், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.
தமிழர்கள் அதிகளவில் வாழும் மணிப்பூர் -மியான்மர் எல்லையோர மோரோ கிராமத்திலும் வன்முறை வெடித்ததில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த மோதலை தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் .

வன்முறை வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பிற இடங்களிலும் கலவரம் வெடித்ததால், இணைய சேவைகள்  முடக்கப்பட்டு 8 மலையோர மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன
மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய பாதுகாப்புப் படைகள் விமானம் மணிப்பூரில் நிறுத்தப்பட்டுள்ளன. 

அங்கு வசிக்கும் தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு நிலைமை உள்ளதால் உதவி கேட்டு தமிழக அரசையும் அணுகி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு மணிப்பூர் மாநில அரசுடன் இணைந்து செய்து வருகிறது. குறிப்பாக, அத்தியாவசிய தேவையான குடிநீர் பால் உள்ளிட்டவைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து மணிப்பூர் மாநிலத்திற்கு பட்ட மேற்படிப்பு படிக்க சென்றுள்ள சுமார் 50 மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் அங்கு தவித்து வந்தாலும் பயந்த சூழ்நிலையில் தான் உள்ளனர். இதில் யாரேனும் தமிழகத்துக்கு வர விரும்பினால் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுக்கும் என அரசு அறிவித்திருந்தது அதன் அடிப்படையில் மணிப்பூரில் உள்ள மணிப்பூர் விவசாயக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்களில் ஐந்து பேர் இன்று டெல்லி வழியாக சென்னை வருகிறார்கள். 

இதில் ஒருவர் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவர், தூத்துக்குடி நெல்லை சென்னை ஆகிய ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் ஐந்து பேர் இன்று சென்னை வந்து அவர்கள் ஊருக்கு செல்ல உள்ளனர். 

மணிப்பூரில் அடுத்த வாரம் பரீட்சை தொடங்க இருப்பதால் மற்ற மாணவர்கள் மணிப்பூரிலேயே தங்கியிருந்து பரீட்சை எழுதி முடித்ததும் தமிழகம் திரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அங்குள்ள நிலைமைகளை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.