தமிழ்நாடு

என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி கொள்ளையடித்த சம்பவம்...! தானாக சரணடைந்த மர்ம கும்பல்...!

Malaimurasu Seithigal TV

என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி செல்போன் கடை உரிமையாளர் வீடு மற்றும் கடையில் கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், அவ்வழக்கு தொடர்பாக 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

சென்னை முத்தியால்பேட்டை மலையப்பன் தெரு பகுதியில் சகோதரர்களுடன் வசித்து வருபவர் ஜமால். இவர் பர்மா பஜார் பகுதியில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி ஜமால் வீட்டிற்கு வந்த ஒரு கும்பல் தங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சோதனை நடத்த வந்துள்ளதாகவும் கூறி செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு சோதனையிட்டுள்ளனர். பின்னர் பர்மா பஜாரில் உள்ள ஜமாலின் கடையிலும் இந்த கும்பல் சோதனை நடத்தி, வீடு மற்றும் கடையில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஜமால் விசாரித்தபோது, அவர்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள் இல்லை என்பது தெரியவந்த நிலையில், மோசடி செய்யப்பட்டது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஜமால் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் துவங்கினர்.

மேலும், துறைமுகம் உதவி ஆணையர் வீர குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ராயபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த  புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், பல்லவன் சாலையைச் சேர்ந்த கார்த்திக், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் ரவி ஆகிய 6 பேர் இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் செல்போன் சிக்னல்களை கண்காணித்தபோது 6 பேரும் கார் மூலம் ஊட்டிக்குச் சென்றுள்ளது தெரியவந்தது. 

அதனடிப்படையில் தனிப்படையினர் ஊட்டிக்கு விரைந்த நிலையில், அந்த தகவல் அறிந்த 6 பேரும் செல்போன்களை அணைத்துவிட்டு, ஊட்டியில் இருந்து பேருந்து மூலம் கோவைக்கு தப்பிச் சென்றுள்ளனர். போலீசாரின் தொடர் விசாரணையில் 6 பேரும் கோவையில் இருந்து சேலம் வழியாக பழனிக்குச் சென்று தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பழனி விரைந்த நிலையில், போலீசில் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் 6 பேரும் பழனியில் இருந்து வந்து இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரணடைந்த 6 பேரும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பந்தயம் கட்டுபவர்கள் எனவும், பந்தயங்களில் தோற்று நஷ்டத்திற்கு ஆளானதால், இந்த கும்பலைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன் முத்தியால்பேடையைச் சேர்ந்த ஜமாலிடம் நிறைய பணம் உள்ளதாக தனக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து, கூட்டாளிகளான மற்றவர்களுக்கு மோசடிக்கான திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குற்றவாளிகள் 6 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதால், நாளை அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும், அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகே முழு விவரம் தெரியவரும் எனவும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.