கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை அருகே நாகனூர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு முட்டை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி இருந்ததாகவும், முட்டையில் ஒரு வித துர்நாற்றம் வீசியதாகவும் பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். பபள்ளியின் மேலாண்மைக்குழுவினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தினை தொடர்பு கொண்ட போது, மாணவர்களுக்கு வழங்கிய முட்டைகள் இது போல தான் இருந்து வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சத்துக்காகக் கொடுக்கப்படும் முட்டைகள் குழந்தைகளின் உயிருக்கே உலை வைத்துவிடுமோ என்று பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். முட்டை டெண்டரில் ஏதேனும் ஊழல் நடைபெற்றுள்ளதா? அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டிய முட்டைகள் கால தாமதமானதா? என்று பல்வேறு கோணங்களில் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றது.