கேரள காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டுள்ள பிரேம் குமார் என்ற தொழிலதிபர் தமிழக முதலமைச்சர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரேம் குமார் தவெகவுடன் தொடர்பு உள்ளவர் என்றும் அவரும் முதலமைச்சரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பாரத் லஜ்னா பல மாநில வீட்டுவசதி கூட்டுறவு சங்கம் (BLM) என்ற நிதி நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் பிரேம் குமார். இவர் இன்னும் சில நிறுவனங்களின் இயக்குனராகவும் செயல்படுகிறார்.
கோழிக்கோடு குற்றவியல் பிரிவின் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவலர்களால் அக்டோபர் 29ம் தேதி சென்னையில் கைது செய்து செய்யப்பட்டார் பிரேம் குமார். அவர் உடல்நிலை சரியில்லை எனக் கூறியதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். உடல்நிலை சரியானதும் கோழிக்கோடு அழைத்துச் செல்லப்படுவார்.
மோசடி செய்து பெறப்பட்ட ரூ.5000 கோடி பணம் தனிப்பட்ட கணக்குகள் மற்றும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், திரையரங்குகள் உள்ளிட்ட பிற வணிக முயற்சிகளுக்கு திருப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
யூனிக் டைம்ஸ் இதழுக்கு 2023-ல் அளித்த பேட்டி ஒன்றின்படி, பிரேம்குமார் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்தார்; அங்கு அவரது தந்தை சென்னை துறைமுக அறக்கட்டளையில் பணிபுரிந்துள்ளார்.
ஒருமுறை அவருக்கு கூட்டுறவு வங்கிக் கடன் பெறுவதில் சிரமங்களை சந்தித்துள்ளார். இதுவே, சாதாரண மக்களுக்கு நிதியுதவி வழங்கக்கூடிய ஒரு நிறுவனத்தை நிறுவ அவரைத் தூண்டியது. அந்த அனுபவத்திற்குப் பிறகு, நான்கு நண்பர்களின் ஆதரவுடன் 2006-ல் பிஎல்எம்-ஐ நிறுவியதாக பிரேம்குமார் அந்தப் பேட்டியில் கூறினார்.
பி.எல்.எம், 2002-ஆம் ஆண்டு பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் சென்னையில் நிறுவப்பட்டது. அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் பிரேம்குமாரை அதன் நிறுவனத் தலைவராகக் குறிப்பிடுகிறது.
BLM நிறுவனம் நிலம் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, போக்குவரத்து, கல்வி, ஆபரணங்கள், குடிமைப் பொருட்கள் வழங்கல், ரெசார்டுகள் மற்றும் நிலையான ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுவதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் அதன் வணிகங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிக வருமானம் தருவதாக வாக்குறுதியளித்து, ஓய்வுபெற்ற முதியவர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து பிஎல்எம் (BLM) முதலீடுகளை (வைப்புத்தொகை) ஈர்த்ததாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பணம் செலுத்தியவர்கள், தங்களது முதலீட்டுத் திட்டங்கள் முதிர்வடைந்த பிறகு, பணத்தை எடுப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடு செய்யப்பட்ட வைப்புத்தொகை விதிகளுக்கு புறம்பாக தனிப்பட்ட கணக்குகள், குடும்ப உறுப்பினர்களின் கணக்குகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றசாட்டின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
BLM உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பணமோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க, அமலாக்க இயக்குநரகம் ஒரு அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையையும் (ECIR) பதிவு செய்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிரேம் குமார் விசாரணையை தடுக்க திருவனந்தபுரம் சென்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பின்னர் அவர் சென்னை வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்து கைது செய்துள்ளனர்.
பிரேம்குமார் முதலமைச்சர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட படம் ஜூலை 3, 2026 அன்று தலைமை செயலகத்தில் எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவிக்கிறது.
அந்த புகைப்படத்தில் நியூஸ் தமிழ் 24x7 நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக பிரேம் குமார் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் செய்தி நிறுவனத்துடன் தொடர்புடையவர் அல்ல என்று நியூஸ் தமிழ் 24x7 சேர்மன் சகிலன் பத்மநாபன் கூறியதாக தி சவுத் ஃபர்ஸ்ட் தளம் தெரிவிக்கிறது.
அந்த செய்தியறிக்கையின்படி, சகிலன் பத்மநாபன், “திரு. பிரேம்குமார், நியூஸ் தமிழ் 24×7 உடன் எந்த வகையிலும் தொடர்புடையவர் அல்ல. நியூஸ் தமிழ் 24×7-க்கு சகிலன், நாகமாணிக்கம் மற்றும் குமரன் என மூன்று இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர்” என்று தெளிவுபடுத்தினார்.
பிரேம்குமார், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்தபோது இந்தக் குழப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) தனது பத்திரிக்கை அறிக்கையில் அவரைத் தவறுதலாக நியூஸ் தமிழ் 24×7-ன் இயக்குநர் என்று குறிப்பிட்டிருந்தது. இதை திருத்த கோரிக்கை வைத்துள்ளதாகவும் சகிலன் கூறியுள்ளார்.
"ஆர் பிரேம்குமார் நியூஸ் மலையாளம் 24×7 நிறுவனத்தின் ஒரே பங்குதாரர் ஆவார். அவருக்கு நியூஸ் தமிழ் 24×7 நிறுவனத்துடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லை." என நியூஸ் மலையாளம் 24×7 செய்தி நிறுவனத்தின் HR தி சவுத் ஃபர்ஸ்ட் தளத்திடம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.