cm vijay and rs barathi  
தமிழ்நாடு

“தவெக- விற்கு வாக்களித்தவர்களுக்கு நல்ல சாவு வராது”- கலைஞர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி சர்ச்சை பேச்சு!

ஏசி பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளை சுட்டிக்காட்டி, அவற்றைப் பயன்படுத்துபவர்கள் தவெகவுக்கு வாக்களித்ததாக விமர்சனம்...

Mahalakshmi Somasundaram

சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பெஞ்சமின், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காரப்பாக்கம் கணபதி, பிரபாகர் ராஜா, திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்களின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, “இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது, நாம் இன்னும் ஆளும் கட்சியாக இருக்கிறோமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 1970-களில் திமுக கூட்டங்களுக்கு தொண்டர்கள் எப்படி திரண்டு வந்தார்களோ, அதேபோல் இன்றும் வந்திருக்கிறீர்கள்” என்றார்.

தொடர்ந்து, திமுக ஆட்சி இழந்த பின்னர் தான் பங்கேற்கும் கூட்டங்கள் குறித்து பேசிய அவர், தற்போதைய தலைமுறையினர் திமுக தலைவர் தோல்வியடைந்ததை பார்த்ததில்லை என்பதால், இந்தத் தோல்வி தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எந்தத் தேர்தலிலும் தோல்வியடையாமல் 13 முறை வெற்றி பெற்றதாக குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, மு.க.ஸ்டாலின் தோல்வியால் திமுக தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும், ஸ்டாலின் எதிர்காலத்தில் இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றும் தலைவராக உருவெடுப்பார் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சுட்டிக்காட்டி, தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களித்தவர்களையும் கடுமையாக விமர்சித்தார். வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், மக்கள் தாங்கள் அளித்த வாக்கின் விளைவுகளை உணர வேண்டும் எனக் கூறினார். மேலும், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஏசி பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளை சுட்டிக்காட்டி, அவற்றைப் பயன்படுத்துபவர்கள் தவெகவுக்கு வாக்களித்ததாக விமர்சனம் செய்தார்.

ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மருத்துவமனை மற்றும் சுகாதாரத் திட்டங்களை குறிப்பிட்ட அவர், அந்த மருத்துவமனைகளுக்கு வந்து செல்லும் நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்டோர் தவெகவுக்கு வாக்களித்ததாகக் கூறினார். அப்போது, சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்பிரமணியனை தோற்கடித்து, “தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்தவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது” என ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இனிமேல் மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்றும், கட்சியினருக்காக பணியாற்றுவோம் என்றும் அவர் பேசியது மேலும் கவனம் பெற்றது. “5 ஆண்டுகளுக்கு ஓய்வெடுப்போம்” எனக் கூறிய அவர், தற்போது மக்கள் தங்களது பகுதிகளில் நிலவும் குடிநீர் மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிற்கு மு.க.ஸ்டாலின் செய்ததைப் போன்று வேறு யாரும் செய்யவில்லை எனக் கூறிய ஆர்.எஸ்.பாரதி, திமுக பலமுறை ஆட்சியில் இல்லாமல் இருந்த அனுபவம் கொண்ட கட்சி என்றும் தெரிவித்தார். திமுகவுக்கு எதிராக வாக்களிக்காதவர்களை விமர்சித்ததுடன், குறிப்பாக தவெகவுக்கு வாக்களித்த மக்களைப் பற்றி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்