தமிழ்நாடு

கோடை வெப்பம் - தரமான குடிநீர் வழங்க பெற்றோர் கோரிக்கை!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள அரசு, தனியார் மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் முதல் நாளான இன்று ஆர்வத்துடன் வருகை தந்தனர். மேலும், கோடை வெப்பத்தின் தாக்கம் இன்று வரை குறையாத காரணத்தினால் தரமான குடிநீர் வசதியை பள்ளி நிர்வாகங்கள் கொடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேப்போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகள் என 581 பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன. பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதேப்போல், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான , அரசம்பட்டி, பாரூர், நாகரசம்பட்டி மற்றும் அகரம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேப்போன்று தேனி மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், போடி பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதால், அப்பகுதியில் முதல் நாளிலேயே வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.