தமிழ்நாடு

சென்னையில் 63 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களை கண்டுபிடித்து சீல் வைக்க மாநகராட்சிக்கு பரிந்துரை...

சென்னையில் உரிமம் பெறாமல் நடத்தியதாக 63 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களை போலீசார் கண்டுபிடித்து அவற்று சீல் வைக்க மாநகராட்சிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் தரகர்களிடம் லஞ்சம் பெற்று ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடத்த அனுமதி வழங்கியதாக அவர்களது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில் சென்னையில் உரிமம் பெறாமல் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக சென்னை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சென்னையில் உள்ள 151 இடங்களில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக கீழ்பாக்கம், தியாகராய நகர், அண்ணா நகர், வடபழனி, அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசாரின் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த சோதனையில் உரிமம் பெறாமல் நடத்தி வந்த 63 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மசாஜ் சென்டரில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடத்தியதாக ஒருவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சோதனையின்போது கூடுதலாக உரிமம் பெறாத 43 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் மூடப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.