"ஆளுநர் ஆட்சி வந்தா வந்துட்டு போகட்டும்.. அதுக்காக தவெகவுக்கு ஆதரவு கொடுப்பீங்களா?" - விளாசிய சீமான் 
தமிழ்நாடு

"ஆளுநர் ஆட்சி வந்தா வந்துட்டு போகட்டும்.. அதுக்காக தவெகவுக்கு ஆதரவு கொடுப்பீங்களா?" - விளாசிய சீமான்

"சாதியை ஒழித்துவிட்டோம், மதத்தை ஒழித்துவிட்டோம் என்று பேசுகிறார்கள். அப்படி என்றால், நீங்கள் வாழ்கிற சோழிங்கநல்லூரிலோ, வேளச்சேரியிலோ நின்றிருக்கலாமே? ஏன் பெரம்பூரில் நின்றீர்கள்?" - சீமான் சாடல்

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் இடைத்தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில், மதுராந்தகம் தொகுதியில் சீமான் பேச்சு கவனம் பெற்று வருகிறது.

ஐந்துமுனைப் போட்டி நடைபெறும் இந்தத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக கோ. ஜானகி ராமன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து நேற்றைய தினம் பரப்புரை மேற்கொண்டார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அந்தப் பரப்புரையில், தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார்.

"விடிய விடிய பேரம் பேசுவாங்க"

சீமான் பேசுகையில்:

"இந்தப் பெரியவர்கள் ஆளுநர் ஆட்சி வந்துவிடும், பிஜேபி ஆளுநர் வழியாக ஆட்சி செய்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆளுநர் ஆட்சி எத்தனை நாட்களுக்கு இருந்துவிடும்? ஆறு மாதத்துக்கு இருக்கும், அதற்குப் பிறகு தேர்தல் வரும்.

அதற்குப் பிறகு நின்று வெற்றி பெற வேண்டியதுதானே?

ஆளுநர் ஆட்சியை வைத்து பிஜேபி நம்மை கேவலப்படுத்துகிறது என்று சொல்லி வெல்ல வேண்டியதுதானே?

இதைக் காரணம் காட்டி ஆதரவளிப்பது ஏன்?"

"இன்றைக்கு விஜய் கட்சிக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸோ, மற்ற கட்சிகளோ தனித்து நின்று வெல்ல முடியுமா? தோல்வியைச் சந்திக்கத் துணிவிருக்கிறதா?

எனக்குத் துணிவிருக்கிறது.

ஏனென்றால், நான் பிரபாகரன் மகன்.

காசுதான் சம்பாதிக்கணும்னா, 2,000 கோடி பேரம் பேசுகிற போதும் போகாமல், தெருவில் நின்று இயக்கம் நடத்திக்கொண்டு இருக்க வேண்டியதில்லை.

அரை விழுக்காடு, கால் விழுக்காடு ஓட்டு இருக்கிறவர்களுக்கே இவ்வளவு பேரம் பேசுகிறார்கள் என்றால், 36 லட்சம் ஓட்டு, 8.5 விழுக்காடு ஓட்டு வைத்திருந்த என்னை எப்படியெல்லாம் பேரம் பேசுவார்கள்? விடிய விடிய பேரம் பேசுவாங்க.

'உன்னைத் துணை முதலமைச்சராக்குறோம், அதைக் குறைக்குறோம், இதைக் குறைக்குறோம், இவ்வளவு நிதி தரோம்' என்பார்கள்.

நம்ம வாடகை வீட்டில் இருக்கிறதைப் பார்த்து வருத்தப்படுறாங்க. என்னுடைய மனைவி கழுத்தில், காதில் ஒண்ணும் இல்லாமல் இருக்காங்களே என்று குடும்பத்தினர் மீது அக்கறைப்படுவார்கள். இவ்வளவு அக்கறையா என்று கேட்டால், கடைசியாகக் கூட்டணிக்கு வா என்று அழைக்கிறார்கள்" எனப் பேசினார்.

நான் மட்டும் சட்டமன்றத்துக்கு வந்திருந்தால்...

மேலும், "இந்த இரண்டு கட்சிகளின் தயவிலும் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் அருமை பெருமகன், என்னுடைய தம்பி மாண்புமிகு முதல்வர்.

சாதியை ஒழித்துவிட்டோம், மதத்தை ஒழித்துவிட்டோம் என்று பேசுகிறார்கள். அப்படி என்றால், நீங்கள் வாழ்கிற சோழிங்கநல்லூரிலோ, வேளச்சேரியிலோ நின்றிருக்கலாமே?

ஏன் பெரம்பூரில் நின்றீர்கள்? என்றால், அங்கே மதம் இருக்கிறது.

திருச்சி கீழக்கை ஏன் தேர்வு செய்தீர்கள்? அங்கே உங்க ஜாதியும், மதமும் இருக்கிறது.

நீங்கள் பேசக்கூடாது, நான் பேசலாம். நான் கடலூரில் நின்றேன், திருவெற்றியூரில் நின்றேன், காரைக்குடியில் நின்றேன்.

தோற்றுப்போனேன்.

ஆனால், பெருமையாக அந்தத் தோல்வியைத் தாங்குகிற வலிமையும், திமிரும் எனக்கு இருக்கிறது."

என் தம்பி கோகுல் என்னிடம், "இரண்டு தொகுதிகளில் நிற்கலாம். திருவெற்றியூரிலும் நில்லுங்கள், காரைக்குடியிலும் நில்லுங்கள். திருவெற்றியூரில் நமக்கு அப்பவே 50,000 ஓட்டு இருந்தது" என்றான்.

ஆனால், "இல்லை, அது நம் கொள்கைக்கு எதிரானது" என்று சொல்லிவிட்டேன்.

என்னுடைய கெடுவாய்ப்பு, உங்களுடைய (தவெக) நல்வாய்ப்பு, நான் தோற்றுவிட்டேன். உள்ளே வந்திருந்தால், இதில் ஒருத்தர் கூட உள்ளே இருந்திருக்க முடியாது" எனப் பேசினார்.

நாதகவுக்கு இருமொழி கொள்கை இல்லையா?

மேலும், "தவெகவுக்கு கல்விக் கொள்கை இருக்கிறதா? என்னுடைய கல்விக் கொள்கையில் தமிழ் பயிற்றுமொழி, ஆங்கிலம் பாடமொழி, இந்தி உட்பட உலகின் ஏதோ ஒரு மொழி விருப்பமொழி" எனப் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்