தமிழ்நாடு

தமிழக அரசியலில் இதுவரை எந்தத் தலைவரும் செய்யாத சாதனை.. 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் சீமான்! திருச்சியில் குவியும் தொண்டர் படை!

இறுதி கட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன...

மாலை முரசு செய்தி குழு

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் வகையில், நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட மாநில மாநாடு இன்று திருச்சியில் நடைபெறவுள்ளது. திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திடலில் நடைபெறும் இந்த மாநாட்டில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார்.

தமிழகத்தில் நிலவும் நான்கு முனைப் போட்டியில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாமல் தனித்துப் போட்டியிடும் ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி மீண்டும் களம் காண்கிறது. இந்த எழுச்சி மாநாட்டிற்காக சுமார் இரண்டு லட்சம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான இறுதி கட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மாநாட்டின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை கருதப்படுகிறது. தமிழக அரசியலிலேயே இல்லாத அளவிற்கு இவ்வளவு பெரிய மேடையில் 234 வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதியைப் பறைசாற்றும் விதமாக, இந்தத் தேர்தலில் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்களுக்குச் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு திருநங்கை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 10 இஸ்லாமியர்கள், 8 பார்ப்பனர்கள் மற்றும் மாற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட 10 பேருக்கும் வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்தொகுதிகள் மட்டுமின்றி பொதுத் தொகுதிகளிலும் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு வாய்ப்பு வழங்கி சீமான் ஒரு மாற்று அரசியலை முன்னெடுத்துள்ளார்.

திருச்சி மாநாட்டுத் திடல் முழுவதும் தமிழ் சமூகத்தின் மூத்த தலைவர்கள், தமிழர்களுக்காகப் போராடிய முன்னோர்கள் மற்றும் முக்கிய ஆளுமைகளின் புகைப்படங்கள் நிறுவப்பட்டு, ஒரு வரலாற்றுப் பதிவாகத் திடல் காட்சியளிக்கிறது. சுமார் மூன்று மணிக்குத் தொடங்கவுள்ள இந்த மாநாட்டில், வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறிமுகப்படுத்தி சீமான் அவர்கள் உரையாற்ற உள்ளார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி நடத்தும் முதல் மாநாடு இது என்பதால், இது அக்கட்சியினரிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்த வெற்றி மாநாடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.