தமிழ்நாட்டிற்கு காவிரியை பங்கிட்டுக் கொடுத்தால்தான் தேர்தலில் பங்கீடு கிடைக்கும் என காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சி மாட்டம் புத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் வென்றாக வேண்டும் தமிழ் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக, திமுக, பிஜேபி, காங்கிரஸ் என நான்கு கட்சிகளும் தனக்கு சம அளவு எதிரிதான் என்று குறிப்பிட்டார்.
மக்களுக்காக போராடும் நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் நிற்கும் என்று பேசிய அவர், நீட் தேர்வுக்கு விதை போட்டு தண்ணீர் ஊற்றி வளர்ந்தது காங்கிரஸ் கட்சிதான் என்று கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சி விதைத்ததை மோடி வளர்த்து வருகிறார் என்றும் விமர்சித்தார்.
மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் அரசியல் செய்வார்களே ஒழிய தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மாட்டார்கள் என்று பேசிய அவர், காவிரி பங்கிட்டுக் கொடுத்தால்தான் தேர்தலில் பங்கீடு கிடைக்கும் என காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
விழாவின் நிறைவில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் நாம் தமிழர் கட்சி சீமான் முன்பு இணைந்து கொண்டனர்.