தேமுதிக நிறுவனரும், மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் மிக உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜயகாந்த் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
விஜயகாந்த் குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, "தமிழ்நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்படும் கேப்டன் என்கிற ஆளுமை இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவரது அரசியல் பணிகளும், மக்கள் நலப்பணிகளும் நம் மனதில் நீங்காத அலைகளாக வீசிக் கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அவர். ஒரு தூய்மையான மனிதர் அரசியலில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர். 2006-ம் ஆண்டு சட்டமன்றத்தில் நான் உறுப்பினராக இருந்தபோது, அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதுதான் அவருடைய அரசியல் அறிவு, திறமை, சாதுரியம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை நான் நேரடியாகப் பார்த்து வியந்தேன்" என்று பழைய நினைவுகளைக் கூர்ந்து நெகிழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜயகாந்தின் எளிமை குறித்துப் புகழாரம் சூட்டினார். "விஜயகாந்த் ஒரு நடிகராக இருந்தபோதும் சரி, உச்ச நட்சத்திரமாக ஜொலித்தபோதும் சரி, அரசியலுக்கு வந்தபோதும் சரி, எப்போதும் மக்களைச் சார்ந்தே இருந்தார். யாராக இருந்தாலும் அவரை மிக எளிதாக அணுக முடியும், சந்திக்க முடியும். மக்களில் ஒருவராகவே அவர் எப்போதும் தன்னைக் காட்டிக் கொண்டார். ஏதாவது ஒரு போராட்டம் என்றால், தனது வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மக்கலோடு மக்களாகக் களத்தில் இறங்கி விடுவார். பார்க்க முடியாத நடிகராகவோ, பழக முடியாத கதாநாயகனாகவோ அவர் ஒருபோதும் இருந்ததில்லை. இப்படிப்பட்ட ஒரு மாபெரும் பண்பாளரைத் தமிழ்நாடு இழந்திருக்கிறது" என்று கூறினார். மேலும், அவரது அரசியல் வாரிசுகளான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள், கேப்டனின் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதனிடையே, செய்தியாளர்கள் தரப்பில், "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக-வை தங்கள் கூட்டணிக்கு அழைக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறதே, இது குறித்து உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த செல்வப்பெருந்தகை, "கேப்டன் விஜயகாந்த் எதை விரும்பினாரோ, தமிழ்நாட்டு மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு எத்தகையதோ, அதன் அடிப்படையில்தான் தேமுதிக தலைமை முடிவெடுக்க வேண்டும். கேப்டன் தனது வாழ்நாளில் ஒருபோதும் மதவாதத்திற்குத் துணை போனதில்லை. அவரது அரசியல் பயணம் முழுக்க முழுக்க மதவாதத்திற்கு எதிரானதாகவே இருந்தது. 'எம்மதமும் சம்மதம்' என்ற கொள்கையை உடையவர் அவர். திரைப்படங்களில் கூட அவர் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவராகவும் நடித்து அனைத்து மக்களுக்குமான கதாநாயகனாகவே திகழ்ந்தார். சாதி, மதங்களைக் கடந்து நின்றவர் அவர். அந்த அடிப்படையில், தற்போது கட்சியை வழிநடத்துபவர்களும் மதவாத சக்திகளுக்குத் துணை போக மாட்டார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என்று சூசகமாக பாஜக கூட்டணியை நிராகரிக்குமாறு வலியுறுத்தினார்.
இறுதியாக, "தற்போதுள்ள நடிகர்கள் விஜயகாந்த் போல மக்களுடன் நெருக்கமாக இருக்கிறார்களா?" என்ற சர்ச்சைக்குரிய கேள்விக்கு, "இந்த நேரத்தில் இதை அரசியலாக்கவோ அல்லது யாரையும் குறைத்து மதிப்பிடவோ நான் விரும்பவில்லை. ஒரு மாபெரும் மனிதரின் நினைவைப் போற்றும் இந்தத் தருணத்தில், அவரது பெருமைகளை மட்டுமே பேச விரும்புகிறேன். சிறுமையான விஷயங்களைப் பேசி எங்களைத் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. விஜயகாந்த் மதுரையிலிருந்து புறப்பட்டால், விமான நிலையம் செல்லவே ஒரு மணி நேரம் ஆகும். அந்த அளவிற்கு மக்கள் வெள்ளம் அவரைச் சூழ்ந்திருக்கும். அத்தகைய அசுர பலம் கொண்ட மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்தது" என்று கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.