தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்பரிணாமத்தை அடைந்து வருகிறது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் கணிக்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள்.
இது இப்படி இருக்க, ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.
சின்ன ரீவைண்ட்!
அதிமுக கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது.
இதற்கு இடையில் கடந்த செப் 15 -ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் எடுப்பேன் என எச்சரிக்கும் தொனியில் கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார்.
இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில்தான், முத்துராமலிங்க தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன்னிற்கு, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்தார் செங்கோட்டையன். இதுதான் சமயம் என நினைத்த எடப்பாடி, ‘கட்சிக்கு எதிரான செயலில் ஈடுபட்டார் செங்கோட்டையன் எனக்கூறி அவரை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்தும் நீக்கினார். இது எடப்பாடிக்கு பெரும் பின்னடைவு என்றே கருதப்பட்டது.
இந்த சலசலப்புக்கு இடையில் தான், “அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான். 2026, 2029, 2031 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் நான் உள்பட 6 பேர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமெனகேட்டிருந்தோம். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களுடன் சேர்த்து 122 எம்எல்ஏக்கள் முன்மொழிந்து எடப்பாடி பழனிசாமி முதல்வரான நிலையில் அந்த 18 பேரையும் அவர் கட்சியிலிருந்து நீக்கி, எம்எல்ஏ பதவியையும் பறித்தார்” என பரபரப்பான கருத்தை கூறியிருந்தார்.
ஆனால் அதற்கு அதிமுக தலைமை எவ்வித பதில்வினையும ஆற்றாமலே இருந்து வந்தது. நாங்கள் அதிமுக உடன் கூட்டணியில் உள்ளோம் ஆனால், அவர்களின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என பேசிய பாஜக -வா இப்படி செய்தது என கேள்வி எழுப்பப்பட்டாலும், அவர்கள் தரப்பும் செங்கோட்டையனின் பேச்சுக்கு பேச்சுக்குக்கூட மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயுடன் செங்கோட்டையன்!
50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியிலிருந்த செங்கோட்டையனை எடப்பாடி அதிரடியாக நீக்கியிருந்தது, அவருக்கு பெரும் பின்னடைவுதான் என்கின்றனர் ஆர்வலர் பலர். இந்நிலையில் நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் செங்கோட்டையன். ஆனால் இன்றும் அவர் சட்டைப்பையில் ஜெயலலிதா -வின் புகைப்படம் தான் இருந்தது. அந்த அளவுக்கு அதிமுக தலைமைக்கு பலகாலமாக விசுவாசமாக இருந்தவர் செங்கோட்டையன்.
ஆனால் இன்று அவர் தவெக -வில் இணைந்திருப்பது அரசியல் சூழலையே மாற்றியுள்ளது. செங்கோட்டையன் வரவு குறித்து பேசியுள்ள விஜய் “20 வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பதவியை வகித்தவர் கட்சியின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கையாக இருந்தவர். 50 வருடங்களாக ஒரே இயக்கத்தில் பணியாற்றியவர் அண்ணன் செங்கோட்டையன் அவரது அரசியல் அனுபவமும், களப்பயணம் நமது தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு பெரிய உறுதுணையாக அமையும் இனி நல்லதே நடக்கும் நல்லது மட்டும் நடக்கும் வெற்றி நிச்சயம்” என பேசியிருந்தார்.
இந்நிலையில்தான் ஓபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் “அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமை கழகமாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அப்போது தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழல் குறித்து எடுத்துக் கூறினேன். பிரிந்தவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தேன். தொண்டர்களின் எண்ணத்தையும் அமித்ஷாவிடம் கூறினேன். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்பதையே அமித்ஷாவுடன் வலியுறுத்தினேன். எம்ஜிஆர் தொண்டர்களின் இயக்கமான அதிமுக எப்போதும் பிளவுபடாது. ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதேபோல் தனிக்கட்சி தொடங்குவதாக நான் எப்போதும் சொல்லவில்லை. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் அவருடன் பேசவில்லை” என்றும் தெரிவித்துள்ளார். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக ஒன்றிணைய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன் என்று ஓபிஎஸ் சில நாட்களுக்கு முன் கூறிஇருந்தார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் பிரியன், “அதிமுக ஏற்கவே பலவீனமாக உள்ளது. பாஜக தலைமைக்கு அனைவரையும் ஒன்றிணைத்து வலிமையான கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் ஓபிஎஸ் -ஐ அழைத்திருந்தார்கள். எல்லா வகையிலும் இது எடப்பாடிக்குதான் பின்னடைவு, விஜய்யால் அதிமுக தெற்கிலும், டெல்டாவிலும் வலிமை இழந்துள்ளது. போதாக்குறைக்கு செங்கோட்டையன் தவெக -வில் இனைந்து பெரும் பின்னடைவு. போதாக்குறைக்கு அதிமுக -விலிருந்து சிலரை விஜய் கட்சிக்கு கூட்டிக்கொண்டு வந்துள்ளார். செங்கோட்டையன் தவெக -விற்கு ஆள் சேர்க்கும் வேலையை தான் செய்து வருகிறார். எடபடிக்கு முதல்வர் ஆசை மட்டும் இருந்தால் போதாது, கட்சியை பலப்படுத்த சில தளர்வுகளை ஏற்கவேண்டும். மனமாற்றம் இல்லாவிட்டால், அது பெரும் தோல்வியை எடப்பாடிக்கு ஏற்படுத்தி விடும்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.