தமிழ்நாடு

செந்தில் பாலாஜி கைது; "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல்" எழுத்தாளர் இரா.முருகவேள் கருத்து!

Malaimurasu Seithigal TV

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல்" என பிரபல எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான இரா.முருகவேள் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வந்தனர். 18 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இடையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரின் கைது பாஜக -திமுகவினரிடையே கரூர் வட்டாரப் பகுதிகளில் மோதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது சம்பவத்தை கண்டித்து இந்தியாவெங்கும் பல்வேறு எதிர்கட்சிகளின் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான இரா.முருகவேள் தனது முகநூல் பக்கத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் என தெரிவித்துள்ளார். 

அப்பதிவில், "செந்தில் பாலாஜி கைது  செய்யப் படுவது தவிர்க்க முடியாதது போலத் தான் தெரிகிறது. 2014 ஆம் ஆண்டு அவர் அதிமுக அமைச்சராக இருந்த போது அவரது உதவியாளர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றார். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை.
 
இந்நிலையில், அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் உயர் நீதிமன்றத்தில் தான் பணத்தை திரும்பக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டதாக தடையுத்தரவு பெற்றார். இதில் இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதி மன்றம் லஞ்சம் கொடுத்தவரும் வாங்கியவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாது. அது சமூக குற்றம் என்று கூறி வழக்கை தொடர்ந்து
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்படியும், ஊழல் தடுப்பு சட்டப் படியும் விசாரித்து இரண்டு மாதங்களில் அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டது" என இதுவரை இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விவரித்துள்ளார்.

மேலும், "உச்ச நீதிமன்றத்திற்கு அப்பீல் போகும் போதே செந்தில் பாலாஜி நெருக்கடியில் சிக்கப் போகிறார் என்று தோன்றியது. அதிமுகவிற்கு சட்ட விவகாரங்களை எதிர் கொள்வதில் ஏதோ சிக்கல் இருக்கிறது போலத் தெரிகிறது. காவல்துறை விசாரணை மட்டத்திலேயே இந்த வழக்கை முடித்து இருக்கலாம். ஆனால் அப்போது அவர் தினகரன் அணியில் இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, இது போன்ற பிரபல வழக்குகளில் தான் நீதி மன்றங்களும் ஆளும் அமைப்புகளும் நாட்டில் நீதியின் ஆட்சி நடக்கிறது என்று நிலை நாட்ட முயல்வார்கள். இதில் பிஜேபி அரசியல் கட்டாயம் இருக்கத்தான் செய்யும் எனக் கூறியுள்ளார். 

மேலும் தான் கைது செய்யப் படலாம் என்பது அமைச்சருக்கு கட்டாயம் தெரியும் எனக் கூறியுள்ள அவர், இது திமுக அரசின் ஊழல் என்று பிஜேபி காட்ட முயல்வதாகவும், தங்களுக்கு எதிரான தாக்குதல் என்று திமுக கூறுவாகவும் குறிப்பிட்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் என பதிவிட்டுள்ளார்.