தமிழ்நாடு

ஆட்கொணர்வு வழக்கு : அதிரடி வாதங்களை வைத்த செந்தில் பாலாஜி தரப்பு...அதிர்ந்துபோன அமலாக்கத்துறை!

Tamil Selvi Selvakumar

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கை, 27ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக பணம்பெற்று மோசடி செய்ததாக செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதுதொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, விசாரணை நாட்களாக கருதக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் எனவும், அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சஞ்சய் தத் வழக்கை சுட்டிக்காட்டி, சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கை 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். தொடர்ந்து 27ம் தேதி அமலாக்கத்துறை தனது கூடுதல் வாதங்களை முன்வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.