allaince parties meeting dmk 
தமிழ்நாடு

“ஆணவப்படுகொலைக்கு எதிராக தனி சட்டம்..” கூட்டணிக்கட்சிகள் விடுத்த முக்கிய கோரிக்கை!!!

“ஆணவ படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. பொதுவாக ஆணவப் படுகொலை என்பது பட்டியலினத்தை..

Saleth stephi graph

தமிழகத்தில் தொடர்ந்து சாதி ரீதியான படுகொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கையை முதல்வர் பார்வைக்கு திமுக கூட்டணி கட்சிகள் எடுத்து சென்றன, அதன் நீட்சியாக சென்னை ஆழ்வார்பேட்டை சித்ராஞ்சல் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், சி பி ஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆணவ படுகொலைகளை எதிர்த்து தனி சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் “சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய 3 கட்சிகள் சார்பில் முதலமைச்சரை நேரில் சந்தித்தோம்... தமிழகம் முழுவதுமே சாதி ஆணவ படுகொலை சம்பந்தமாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் சாதிய ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று முதலமைச்சரிடம் நாங்கள் மூன்று பேரும் எடுத்துரைத்தோம். 

ஏற்கனவே ராஜஸ்தானில் இந்த சட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்றுவதற்கான தேவையை முதலமைச்சரிடம்  எடுத்துரைத்தோம். எங்களின் கோரிக்கையை கேட்டுக் கொண்ட முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற சாதிய ஆதிக்க சக்திகள் இந்தியா முழுவதுமே அதிகரித்துள்ளது. தற்போது இருக்கும் சட்டம் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை. அனைவரையும் உள்ளடக்கிய ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என பேசியிருந்தார்,

அவரை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில்,  “ஆணவ படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. பொதுவாக ஆணவப் படுகொலை என்பது பட்டியலினத்தை சேர்ந்த ஆண்... பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண்ணை காதலிப்பதால் நடக்கும் கொலை என்று சொல்லப்படுகிறது... இது மட்டும் அல்ல.. ஒரே சாதியில் காதலித்தாலும் குடும்ப கவுரவம் என்ற பெயரில் கொலை நடக்கிறது. இந்த கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

பல்வேறு வகையில் நம் மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளது. பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த நமது மாநிலம் சாதிய விஷயத்திலும் விடுபட்டு வெளியே வரவேண்டிய தேவை உள்ளது. ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருவது முற்போக்கு மாநிலத்திற்கு அழகல்ல. மக்களிடமும் இது குறித்த விழிப்புணர்வு வரவேண்டும். சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இதனை தடுக்க முடியும். எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். சாதிய ஆணவ சிந்தனையுடையவர்களுக்கு இந்த சட்டம் அச்சத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். சட்டம் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறோம்” என பேசியிருந்தார். 

இவர்களை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், “ஏற்கனவே இருக்கும் சட்டம் போதுமானது புதிதாக சட்டம் தேவை இல்லை என்ற கருத்து இருக்கிறது. தனி சட்டம் வேண்டும் என்று வெவ்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த விவரங்களை முதலமைச்சரிடம் கொடுத்த மனுவில் கோடிட்டு காட்டி இருக்கிறோம். 

இது எல்லா சமூகத்தினருக்குமான பிரச்சனை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடக்கிறது. தேசிய அளவில் சட்டம் வேண்டும் என்றாலும் கூட... மாநில அரசு தனியாக சட்டம் இயற்ற உரிமை உள்ளது என்ற அடிப்படையில் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். 

அமைச்சரவையில் சட்டம் இயற்றப்படுமா என்ற கேள்விக்கு அது பற்றி எனக்கு தெரியாது என பதில் அளித்த அவர், அறிவித்தபடி ஒன்பதாம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும். ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்றாவது குறித்து அரசு செவி சாய்க்காமல் இருப்பது தொடர்பான கேள்விக்கு.... அப்படி சொல்லிவிட முடியாது..  முடிந்தவரை இருக்கும் சட்டங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார்கள். கவின் படுகொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து இருக்கிறார்கள்.. சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. எந்த பாரபட்சமும் இல்லாமல் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.  கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் அடிமையாக இருப்பதாக இபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு.... அவர்கள் பாஜகவிடம் எப்படி இருக்கிறார்களோ மற்றவர்கள் அப்படி இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். 

இடைநிலை சமூக வாக்குகள் கிடைக்காது என்பதால் சட்டம் இயற்றப்படவில்லையா என்று கேள்விக்கு..... இது ஒரு கற்பனை இது ஒரு யூகம். அப்படி எதுவும் இல்லை. மக்கள் உடனடியாக மனம் மாறிவிடமாட்டார்கள். மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். கொள்கை அடிப்படையில் சிந்திக்க தெரிந்தவர்கள். யாருக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாக்களிப்பார்கள்.. 

முதலமைச்சரின் உடல்நலம் குறித்தும் விசாரித்தோம். முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் எடுத்துச் சென்றுள்ளோம். விரைந்து பரிசளிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். என அவர் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.