தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் தடுப்பு மருந்து பற்றாக்குறை …

2 லட்சத்திற்கும் குறைவான டோஸ் தடுப்பூசிகள் தமிழக அரசிடம் கையிருப்பு உள்ள நிலையில் இன்றும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திட முன்வரும் பட்சத்தில் தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு பூஜ்ஜியம் என்ற நிலையை எட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்திற்கு தற்போது வரையிலும் ஒரு கோடியே ஒரு லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது அதில் 93 லட்சத்து 75 ஆயிரத்து 305  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கையிருப்பு 3.5லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. நேற்று ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தியவர்கள்  எண்ணிக்கை 2.89 ஆக பதிவு.

தற்போது ஒரு நாளுக்கு தேவையான தடுப்பூசி மட்டுமே மீதம் கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி 45+ வயது பிரிவில் தமிழக அரசுக்கு மத்திய அரசு தொகுப்பிலிருந்து  4.95 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தது.  45 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் மீதமுள்ள கையிருப்பும் சேர்த்து  இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு வசம் 6.50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்தது.

ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 18 வயது மேற்பட்டவர்கள் முதல் அனைத்து வயதுப் பிரிவினரும் சேர்த்து 98,183 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மேலும்,  ஜூன் 2 தேதியில்  தினசரி தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 54,870 ஆக குறைந்த நிலையில் நேற்று தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. நேற்று 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 1,59,062 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2.89 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இதன் மூலம் ஜூன் மாத நிலவரப்படி கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 4.42 லட்சமாக பதிவாகியுள்ளது. தற்போது 2 லட்சத்திற்கும் குறைவான டோஸ் தடுப்பூசிகள் தமிழக அரசிடம் கையிருப்பு உள்ள நிலையில் இன்றும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திட முன்வரும் பட்சத்தில் தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு பூஜ்ஜியம் என்ற நிலையை எட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30க்குள் 18.36 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் மேலும் தமிழக அரசின் தடுப்பூசி நேரடி கொள்முதல் அடிப்படையில் 16.83 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.