Singapore Worker Death 
தமிழ்நாடு

“சிங்கப்பூரில் அடித்து கொல்லப்பட்டாரா சிவகங்கை வாலிபர்?” - ராணுவ வீரர் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.. சடலத்தை கூட அனுப்பாதது ஏன்?

கோபாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் அடித்து கொன்று விட்டார்களா?...

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சிங்கப்பூரில் வேலைக்கு சென்ற தனது சகோதரர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, உரிய விசாரணை நடத்துவதுடன், உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ராணுவ வீரரான அவரது அண்ணன் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் தேவதாஸ். இவரது மனைவி ஞானதீபா ஆரோக்கிய சீலா. இந்தத் தம்பதிக்கு 28 வயதில் ஸ்டீபன் ராஜ், மற்றும் 30 வயதில் செங்கோல்ராஜ் ஆகிய இரு மகன்களும், மரிய பிரிசில்டா என்ற மகளும் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மூத்த மகன் செங்கோல் ராஜ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இளைய மகன் ஸ்டீபன் ராஜ் சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்லும் ஸ்டீபன் ராஜ் வழக்கம் போல கடந்த செப்டம்பர் சிவகங்கைக்கு வந்துவிட்டு மீண்டும் கடந்த அக்டோபர் 10-ம் தேதி பணிக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ளார். இதையடுத்து, (நவ 13) ஆம் தேதி ஸ்டீபன் ராஜ் பணிபுரியும் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர், அவரது சகோதரர் செங்கோல்ராஜைத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, ஸ்டீபன் ராஜை (நவ-11) ஆம் தேதி முதல் காணவில்லை என்றும், அவர் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளாரா என விசாரிக்குமாறும் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த செங்கோல் ராஜ், தனது தந்தை அருள் தேவதாஸுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, சிங்கப்பூரில் காணாமல் போன தனது சகோதரரைக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி (நவ 13) ஆம் தேதி அன்றே மனு அளித்துள்ளார். பின்னர் சிங்கப்பூரில் உள்ள உறவினருக்கு தகவல் அளித்து ஸ்டீபன்ராஜை தேடுமாறு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பலமுறை நிறுவன மேலாளருக்கு போன் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

Stephen Raj Death

பின்னர் கடந்த (நவ 15) ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து போன் செய்த உறவினர் ஸ்டீபன் ராஜ் உயிரிழந்துவிட்டதாகவும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிறுவனத்தில் தெரிவிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். ஆனால் உடல் ஸ்டீபன் ராஜ் தங்கியிருந்த அறைக்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ஸ்டீபன் ராஜின் உடலும், உடலுக்கு அருகிலேயே கயிறும் தனித்தனியாக கண்டெடுக்கப்பட்டதாக செங்கோல் ராஜிடம் அவரது உறவினர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய தூதரகம் என்ற பெயரில் செங்கோல் ராஜிடம் பேசியவர்கள் உடல் அழுகி விட்டதாகவும் எனவே ஸ்டீபன் ராஜ் உடலை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ஸ்டீபன் ராஜின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்து செங்கோல் ராஜிடம் நமது செய்தியாளர் விசாரித்தபோது அவர் “எனது தம்பியை அவர் வேலை செய்த நிறுவனம் அடித்து கொன்றுவிட்டதா? அல்லது ஒரே அறையில் உடன் தங்கியிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் அடித்து கொன்று விட்டார்களா என தெரியவில்லை. எனக்கு இந்த இரு தரப்பினர் மீது தான் சந்தேகம் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

எனவே ஸ்டீபன் ராஜ் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும், உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக, செங்கோல்ராஜ் மற்றும் அவரது தந்தை அருள் தேவதாஸ் ஆகியோர் மீண்டும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சியர் ஆகாஷைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். வெளிநாட்டில் பணிபுரிந்துவந்த மகன் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ள நிலையில், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வேண்டும் என்றும், உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர அரசு உதவ வேண்டும் என்றும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.