சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சிலர் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சேலம் மாவட்ட வனத்துறையின் தனிப்படையினர் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது டேனிஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், முருகன் மற்றும் புஷ்பராஜ் ஆகியோரது வீட்டில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 3 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள், வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய வலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.