தமிழ்நாடு

திருவண்ணாமலையில் வளர்ந்து வரும் கஞ்சா போதையை ஒழிக்க சமூக ஆர்வலர் அறைகூவல்!

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலை பகுதியில் கஞ்சா போதை நஞ்சாக வளர்ந்து வருவதாகவும் அதனை ஒழிப்பதற்கான அறவழி போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் அறைகூவல் விடுத்துள்ளார். 

திருவண்ணாமலை நகரம், புதுவாணியங்குளம் முதல் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். கல்வி மற்றும் வேளாண்மை சார்ந்த சமூக பணிகளில் ஈடுபட்டுவருபவர். இவர் தனது முகநூல் பக்கத்தில் கஞ்சா போதைக்கு எதிரான அறவழி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

அப்பதிவில், ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் இரும்பு ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் அவரது தந்தை மற்றும் தம்பிக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இதனால் அவரது தந்தைக்க காது கிழிந்து தையல் போடப்பட்டதாகவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது தம்பிக்கு தலையிலும், முதுகிலும் காயம் ஏற்பட்டு உயிர் தப்பினால் தப்பித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த வன்முறையை செய்த எவரும் நாங்கள் வசிக்கும் தெருவிலோ அல்லது அருகாமை தெருவிலோ வசிக்கவில்லை என பதிவிட்டுள்ள அவர், தியாகி அண்ணாமலைப் பள்ளி தான் அவர்களின் இரவு வாழ்கைக்கு பயன்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்ச்சியாக கஞ்சாவுக்கு எதிராக குரல் கொடுத்தும் வன்முறைகள் குறைந்தபாடில்லை என குறிப்பிட்டுள்ள அவர், அப்பகுதியில் இருக்கும் தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு பள்ளியில், கஞ்சா மற்றும் பல்வேறு போதைப் பொருட்கள் பயன்படுத்தும் நபர்கள் இரவு முழுவதும் சுவரேறி உள்ளே வெறியாட்டம் போடுவது அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு இன்னல்களை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

கஞ்சா போதையில் உள்ள நபர்களை எந்தவகையிலும் கையாள முடியாமல் நாங்கள் திணறிக் கொண்டிருப்பதாக வருந்தியுள்ள அவர்,இதை தனிப்பட்ட பிரச்சனையாக கையாளாமல் சமூக பிரச்சனையாகவே பார்ப்பதாகவும், இந்த கஞ்சா ஒழிப்பிற்கான அறவழி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் இதற்கு நண்பர்கள், பொதுமக்கள், ஊடகத்தினரின் ஆதரவு  தேவை எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.