தமிழ்நாடு

” அமைதியாக இருக்கும் இந்த நாட்டை சிதைக்க சிலர் நினைக்கிறார்கள் - முத்தரசன்.

'ஆளுநருக்கு கருப்பு என்றால் அவ்வளவு பயம்..... ‘

Malaimurasu Seithigal TV

பல மதங்கள் மற்றும் பல சாதிகளைக் கொண்டு அமைதியாக இருக்கும் இந்த நாட்டை சிலர் சிதைக்க நினைப்பதாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் கூறியுள்ளார். 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் பொதுவாழ்வை கவுரவிக்கும் வகையில் 90-இல் 80 அவர்தான் வீரமணி என்ற நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.

இதில் தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

அப்போது, விழா மேடையில் முத்தரசன் பேசியபோது:- 

" எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களை பின்பற்றும் தொண்டர்கள் அரசியல் ரீதியாக தெளிவோடு இருக்க வேண்டும் என்பதாக தொடர்ந்து கூட்டங்களை நடத்தும். அந்த பணியை இந்த வயதிலும் ஆசிரியர் வீரமணி அவர்கள் சிறப்பாக செய்து வருகிறார். 

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு வந்துள்ளது.  அதனை விமர்சித்து, விடுதலை ஏட்டில் வந்துள்ள செய்தியில் 'ஆளுநருக்கு கருப்பு என்றால் அவ்வளவு பயம். அவருக்கு சமாதானம் மட்டும் தான் பிடிக்கும். தலைமுடி கருப்பாக இருக்கே, கண் கருவிழி கருப்பாக இருக்கே என்ன செய்வது என்றெல்லாம் கேட்கப்பட்டுள்ளது.

திறமையானவனை தேடாதீர்கள்; நம்பகமானவனை தேடுங்கள் என சொல்வார்கள். அப்படி இன்றளவும் தந்தை பெரியாருக்கு நம்பகமானவராக வீரமணி இயங்கி வருகிறார்.  இந்த நாடு பல மதங்களைச், பல சாதிகளை கொண்ட நாடு. அதையெல்லாம் கொண்டு அமைதியான இருக்கும் இந்த நாட்டை சிதைக்க சிலர் நினைக்கிறார்கள். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட், வி.சி.க போன்ற கட்சிகள் விலக வேண்டும் என்ற நோக்கில் சிலர் பேசி வருகிறார்கள். அப்படி நடந்தால் என்ன ஆகும், வரக்கூடாதவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். ஆனால் நம்முடைய முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் சொன்னது தான், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் தான் வரவிருக்கும் தேர்தல் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்... 

தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த அணி சிதறிப் போகும் என தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவர்களின் நோக்கம் அது. ஆனால் ஓரணியாக அனைவரும் ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் பணியை, எந்த தேர்தலிலும் போட்டியிடாமல்  அரசியல் பணிகளை செய்துவரும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி  இருக்கிறார். 90 வயதில் அவர் ஆற்றிவரும் பணிகளுக்கு இணையாக இன்றைக்கு எங்களால் கூட பணியாற்ற முடியவில்லை. ஆசிரியர் அவர்களின் பணிகள் இன்னும் இன்னும் சிறக்க வேண்டும்",  என்றார்.