இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகம் உள்ளதாக, திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பெங்களூரு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, விமானம் மூலம் மதுரை வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டிக்கு வந்தடைந்தார். பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது பொன்னியின் செல்வன் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பை, பிரதமருக்கு நினைவு பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து, சாலை மார்க்கமாக திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் புறப்பட்டார். அப்போது, சாலையின் இருபுறங்களிலும் திரண்ட மக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமரும், திறந்த காரில் நின்றபடி, மக்களுக்கு உற்சாகமாக கையசைத்தார்.
இதையடுத்து, காந்திகிராம பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் வென்ற மாணவிகள் பிரியா, பிரியங்கா, மாணவர்கள் சபரிநாத், ஜான் விக்டர் ஆகியோருக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, இசைஞானி இளையராஜா, மிருதங்கக் கலைஞர் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வட இந்தியர்கள் ஏதேனும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க சொன்ன மகாத்மா காந்தி, அது தமிழாக இருக்க வேண்டும் என்று கூறியதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண் திட்டம் மூலம் பெரும் மாற்றம் வந்துள்ளதாக கூறிய முதலமைச்சர், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
விழாவில், வணக்கம் என்று கூறி உரையை தொடங்கிய பிரதமர், கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி என தமிழில் தெரிவித்தார். சுதேசி இயக்கத்தின் மையப் புள்ளியாக தமிழகம் திகழ்ந்தது என்று புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் வலியுறுத்தினார்.
சங்க காலத்தில் தமிழர்கள், ஊட்டசத்து மிகுந்த உணவு குறித்து விழிப்புணர்வுடன் இருந்ததாக கூறிய பிரதமர், காசி தமிழ் சங்கமம் காசியில் விரைவில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.