தமிழ்நாடு

தென்மாநில முதல்வர்கள் மாநாடு: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் “சட்டப்பூர்வ உத்தரவாதம் தேவை” - CM விஜய் உரை

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும்

Muthu Lakshmi

சென்னை அருகே கோவளத்தில் 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்று முடித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 1956-ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் 5 மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் தென்னக மண்டலக் குழுவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உறுப்பினர்களாக உள்ளன.

தென் மண்டல கவுன்சில் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ள நிலையில், துணைத் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளார். இன்றைய கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான நீர் வளப் பிரச்சினைகள், மாநிலங்களின் பிரதிநிதித்துவம், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் “மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்கள் தங்களது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்றும், தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்பதை மத்திய அரசு சட்டப் பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், "எந்தவொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாது என மத்திய அரசு சட்டப்பூர்வ உத்தரவாதம் தர வேண்டும். தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்ற சட்டப்பூர்வ உறுதிமொழி தேவை" என முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்திலும், ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது மக்களவையில் உள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, காவிரி நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்திலும் முதலமைச்சர் விஜய் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளும் மதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணை விவகாரத்தை தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் எழுப்பியுள்ளார். "மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுமே பயனடையும். கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் இந்த அணை முக்கியமானது. உங்களுக்கு உதவ நீங்கள் எங்களுக்கு உதவுங்கள்" என அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான கருத்து வேறுபாடுகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. ஒருபுறம் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை மதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்திய நிலையில், மறுபுறம் மேகதாது அணையின் அவசியம் குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசியுள்ளார்.

தென்மாநிலங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை, காவிரி நீர், மேகதாது அணை மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றிருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்