31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை கோவளத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக மாமல்லபுரம் சுற்றுவட்டாரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தென்மண்டல குழுவின் தலைவராக இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மாநாட்டில் தலைமை தாங்குகிறார். இப்போது மாநாட்டை நடத்தும் தமிழக முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராக உள்ளார்.
மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 1956-ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் 5 மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றான தென்னக மண்டலக் குழுவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உறுப்பினர்களாக உள்ளன.
சுழற்சி முறையில் நடத்தப்படும் இம்மாநாட்டின் 30-வது கூட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர், எல்லை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரச்சினைகளை நீதிமன்றத்திற்குச் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் தளமாக இது திகழ்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அதேபோல அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்காத நிலையில் துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன் பங்கேற்றுள்ளார்.
இன்றைய கூட்டத்தில் தொகுதி மறுவரையறை, காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகள், கனிம வள மேலாண்மை உள்ளிட்ட தென்மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் உரிமை சார்ந்த பல முக்கிய அம்சங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்