தமிழ்நாடு

"தென்மாநில முதல்வர்கள் மாநாடு" - சென்னை வரும் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்னை விமான நிலையத்திலிருந்து மாநாடு நடைபெறும்...

Muthu Lakshmi

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ளது. இதனால், இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு வருகை தர உள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நாளை நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், கோவளத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாடு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடையே, அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முதல் கோவளம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் காவல் ஆணையர் தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு நடைபெறும் கோவளம் தனியார் நட்சத்திர விடுதியிலும் பல்வேறு கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்னை விமான நிலையத்திலிருந்து மாநாடு நடைபெறும் நட்சத்திர விடுதிக்கு வருகை தருவதற்காக, ஆந்திர மாநிலத்திலிருந்து தனி வாகனம் வரவழைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்கிரமார்கா, ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கோவளம் செல்லும் துணை முதல்வர் மல்லு பாட்டி விக்கிரமார்கா, கோவளத்தில் தங்கி நாளை நடைபெற உள்ள தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

அமித்ஷாவின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்