சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசிய பொருத்தமற்ற பகுதிகள் நீக்க வேண்டும் என இன்று காலை திமுகவினர் கோரிக்கை வைத்தனர். சபாநாயகர் அந்தக் கோரிக்கையை மறுத்ததால் சட்டமன்றத்துக்குள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் சட்டமன்ற காவலர்களை வைத்து திமுகவினரை வெளியேற்றினார் சபாநாயகர். இந்த நடவடிக்கை சர்வாதிகாரமானது என ஊடகங்களை சந்தித்து பேசியுள்ளார்.
அவர், "தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதில் 200 கொலைகள் நடைபெற்றிருக்கின்றன, 300க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றிருக்கின்றன, காவல் மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன, ஆணவ கொலைகள் நடைபெற்றிருக்கின்றன.
இந்த ஆட்சி அமைந்து 116 நாட்களில் நடைபெற்றுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டினுடைய சட்டமன்றத்தில் திட்டவட்டமாக தன்னுடைய உரையில் சொல்லியிருக்கிறார். இதற்கெல்லாம் நேற்று தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் பதில் சொல்வார் என்று நாங்களெல்லாம் எதிர்பார்த்தோம்." என்றார்.
தொடர்ந்து விஜய் பேச்சில் இருந்த ஆட்சோபனமான விஷயங்களை பட்டியலிட்டார் எ.வ. வேலு, "முதலமைச்சர் பேசுவதைக் 26 நிமிடங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம்.
நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடாது என்று விதிப் புத்தகத்தில் இருக்கிறது. சபாநாயகர் அளித்த விதி புத்தகத்தில் விதி எண் 92 அதைக் கூறுகிறது. ஆனால், முதலமைச்சர் அவர்கள் ஈ.டி.யைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். ஈ.டி வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கிறது, குற்றப் பத்திரிகையை முழுவதுமாக படித்தார். சட்டமன்றத்தில் அப்படி படிக்கக்கூடாது, அதைச் செய்தார்.
அதற்கு அடுத்து, மிசாவைப் பற்றி ஆரம்பித்தார். அவர் ஏற்கனவே சிறந்த நடிகர் என்பதால், அவருக்கே உரித்தான பாடி லேங்குவேஜ்கள் செய்தார். மிசா என்பது ஒரு ஜனநாயக கொடுமை. யாரைப் பற்றியும் பேசக்கூடாது, எழுதக்கூடாது என்ற நிலைமை இருந்தபோது, கழகத் தலைவர் அவர்கள் மிசா கொடுமையில் சிறை சென்றார்.
ஆனால் மிசாவைப் பற்றிப் பேசுகின்ற முதலமைச்சர், அந்த தியாகத்தைக் கொச்சைப்படுத்தி பாடி லேங்குவேஜ் செய்கிறார்.
அதோடு சர்க்காரியா கமிஷன் என்று பேசினார். இதற்கு கலைஞர் அவர்கள் பலமுறை சட்டமன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறார். சர்க்காரியா கமிஷனின் முடிவு என்ன? 1972-இல் சர்க்காரியா கமிஷன் வருகின்ற போது, கல்யாண சுந்தரம் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களும் தான் புகார் கொடுத்தது. கமிஷன் விசாரணைக்கு கூப்பிடும் போது, எம்.ஜி.ஆர் என்ன சொன்னார் என்றால், "எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. வழக்கறிஞர் கண்ணன் என்னிடம் கொடுத்த குடியரசு தலைவரிடம் கொடுக்கச் சொன்னார், நான் கொடுத்தேன்" என்று சொன்னார்.
சர்க்காரியா கமிஷனில் புகார்கள் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை, புகார் கொடுத்தவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அடுத்தது, சர்க்காரியா கமிஷனைக் குறிப்பிடுகின்ற போது, உலக மாநாட்டில் பெருமையைச் சேர்த்துக் கொடுத்த முன்னாள் அமைச்சராக இருந்த மாறனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். குறிப்பிட்டது மட்டுமல்ல, அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் அளவிற்குச் சில வார்த்தைகளை முதலமைச்சர் பயன்படுத்துகிறார்.
கமிஷனில் ஏதாவது ஆதாரமிருந்தால் அது நீதிமன்றத்திற்குப் போயிருக்கும். அதில் எதுவுமே இல்லை, அதைக் கிளப்புகின்றார். நாங்கள் கேட்ட கேள்வி என்ன? மானியக் கோரிக்கையின் மீது பேசுகையில் நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொன்னாரா நேற்று?
அண்ணன் மாறன் அவர்களைப் பற்றி உலகத்திற்கே தெரியும். அவர் மறைந்ததற்கு பிறகு சுற்றுசூழல் ஸ்டாம்ப் ஒன்று வெளியிட்டார்கள். அந்த ஸ்டாம்ப் வெளியிடுகின்ற போது, தயாநிதி மாறன் அவர்கள், இப்போதைய முதலமைச்சரை அழைத்துக் கொண்டு டெல்லிக்குப்போய், அதை வெளியிட்டார்கள். அண்ணன் மாறனுடைய ஸ்டாம்ப் வெளியீட்டு விழாவில், அக்குடும்பத்தில் அவர் முன்னிலையில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட நீங்கள், இன்றைக்கு அவரைப் பற்றி இவ்வளவு கொச்சைப்படுத்திப் பேசவேண்டிய அவசியமில்லை.
இதையெல்லாம் பார்த்தால், நேற்று அவர்கள் விதிகளை மீறியிருக்கிறார்கள். சட்டமன்றத்திற்குச் சில மாண்புகள் இருக்கிறது. அதை மீறுகின்ற விதமாக ஈ.டி.யில் உள்ளதைப் பற்றி முழுவதுமாகப் பேசுகிறார், இது தவறு. ஜனநாயகப் போராட்டமான மிசா, அதைப் பற்றி பாடி லேங்குவேஜ் உடன் கொச்சைப்படுத்திப் பேசியது தவறு.
சர்க்காரியா கமிஷனில் எந்தவித குற்றச்சாட்டடும் நிரூபிக்கப்படாத போது, அதை எடுத்துப் பேசிக்கொண்டிருப்பது தவறு. எனவே, இம்ம மூன்றையும் நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். ஆனால், அவைத் தலைவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் ரியல் ஆட்சி நடத்தினார். இப்போது ரீல் ஆட்சி நடத்துகிறார்கள். நேற்றைக்கு இதெல்லாம், ரீல் எடுக்கவே பேசி இருக்கிறார். நான்கு நாட்களுக்கு முன்னால், அந்தச் சபாநாயகர் இருக்கையில் சத்யபாமா என்ற மாற்று தலைவரை அமர வைத்தனர். அதை வைத்து "இதற்கு முன்னால் சபாநாயகர் இருக்கையில் பெண்களே உட்கார்ந்தது இல்லை" என்று ரீல் போட்டார்கள். ஆனால் எனக்குத் தெரிந்தவரை, யசோதா, லீமாரோஸ், பொன்னம்மாள்... போன்று பலர் அமர்ந்த வரலாறு இருக்கிறது.
ஆகவே, நேற்று நாட்டு மக்களுக்கு ரீல் தயாரிப்பதற்காகப் பேசியிருக்கிறாரே தவிர, எங்களுடைய நியாயமான கேள்வியை ஏற்க மறுத்து, ஜனநாயக ரீதியாக நாங்கள் கேட்டதை மறுத்து, எங்களை காவலர்களை வைத்து பலவந்தமாக வெளியேற்றுகிறார்கள். அவர்களுக்கு நேரடியாகப் பேசுவதற்கு சப்ஜெக்ட் கிடைக்காததால், திமுகவின் மீது பழி சொல்வதற்காக பழைய சப்ஜெக்ட்டையெல்லாம் எடுத்துப் பேசுகிறார்கள். சபாநாயகரின் முடிவுகள் சர்வாதிகாரமானது." என்றார்.