தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்...!

Malaimurasu Seithigal TV

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் 16 ஆயிரத்து 895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 975 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், வெளியூரில் வசிப்பவர்கள் பண்டிகையை, சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்திருக்கிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நாளை முதல் 11-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,365 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,675 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னை கோயம்பேட்டிலிருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் வடபழநி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாமல்  நசரத்பேட்டை புறவழிச்சாலை  மூலம் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் வழியாக செல்லும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் சுதாகர், என்.எஸ்.சி போஸ் சாலை,  தி.நகர், புரசைவாக்கம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வாகனங்களை தொலைவாக நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். கோயம்பேடு செல்லும் அனைத்து வாகனங்களும் மதுரவாயல் வழியாக செல்லும் என்று கூறினார்.  

இதன் தொடர்ச்சியாக, சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக  நாளை முதல் வருகிற 11-ம் தேதி வரை இரவு நேரங்களில் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.