தமிழ்நாடு

சிறு குறு நிறுவனங்களை மேம்படுத்த சிறப்புக்குழு: தமிழக அரசு அரசாணை வெளியீடு...

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க சிறப்புக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

Malaimurasu Seithigal TV

முன்னாள் தொழில்துறை செயலாளர் சுந்தரதேவன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவில், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக உள்ள பேராசிரியர் விஜயகுமார், ரிசர்வ் வங்கியின் பணப்புழக்கம் தொடர்பான குழுவின் முன்னாள் உறுப்பினர் பிந்து ஆனந்த், முன்னாள் சிட்பி தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

நிதித்துறை செயலாளர், தொழில்துறை செயலாளர், சிறு குறு நடுத்தர தொழில்துறை செயலாளர், தொழில் துறை ஆணையர்,மாநில வங்கியாளர் குழு தலைவர் ஆகியோர் கெளரவ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறு குறு நிறுவனங்கள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து இந்தக் குழு ஆய்வு நடத்த உள்ளது.

சிறு,குறு தொழில்துறையை மேம்படுத்த குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டங்களை பரிந்துரைப்பது மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலில் நிதிச்சிக்கல் ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் இந்தக் குழு ஈடுபட உள்ளது.இந்தக் குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யவும் தமிழக அரசு தனது அரசாணையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.