தமிழ்நாடு

தமிழர்கள் மீன்பிடிக்க செல்வதை தடுக்கும் இலங்கை: கச்சத்தீவு கடல் பகுதியில் பழைய பேருந்துகளை இறக்கி அட்டூழியம்...

கச்சத்தீவு கடல் பகுதியில் பழைய உருக்குலைந்த பேருந்துகளை கடலுக்குள் இலங்கை அரசு இறக்கி வருவதால், அப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பில் சிக்கல் எழுந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை பெருக்குவதாக கூறி, உருக்குலைந்த பழைய பேருந்துகளை கடலுக்குள் இறக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவில் இருந்து கச்சத்தீவு வரையிலான கடல் பகுதியில், பயன்படுத்த முடியாத பழைய பஸ்களின் இரும்பு கூண்டுகளை இறக்கி மூழ்கடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரையில் இருந்து பழைய பேருந்துகளை கப்பலில் ஏற்றி, அதனை நடுக்கடலுக்கு கொண்டு சென்று, கடலில் இறக்கப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக நேற்று கடற்படை கப்பல் மூலம் 20 பழைய பேருந்துகள் இறக்கப்பட்டுள்ளன. இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு தமிழக மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  கடலுக்கு அடியில் போடப்பட்ட துருப்பிடித்த பேருந்துகளால், ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகள் மற்றும் மீனவர்களுக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.