ஸ்ரீதர் வேம்பு 
தமிழ்நாடு

"காசு கொடுக்காமல் தேர்தல் நடத்துங்கள்.. அப்போது தெரியும் நிஜமான வின்னர் யார்!" - ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி பதிவு!

தலைவரைத் தீர்மானிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக உள்ளது...

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அறிமுகமானாலும், ஆட்சியமைக்கத் தேவையான முழுமையான பெரும்பான்மை அந்தப் கட்சியிடம் இல்லை என்ற தகவல் இப்போது பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சூழலில், பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ (Zoho) அமைப்பின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதுள்ள அரசியல் சூழலில் எந்த ஒரு அரசு அமைந்தாலும் அது நிலையற்றதாகவே இருக்கும் என்றும், பல்வேறு அழுத்தங்களுக்கு அந்த அரசு ஆளாக நேரிடும் என்றும் அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய ஸ்ரீதர் வேம்பு, "சட்டசபையில் கட்சிகளின் பலத்தைப் பார்க்கும் போது கணக்கு சரியாக வரவில்லை. இப்படி இழுபறியாகத் தையல் போட்டு அமைக்கப்படும் எந்த அரசும் நீண்ட காலம் நிலைக்காது. தமிழகத்திற்கு இதைவிட ஒரு சிறந்த அரசியல் சூழல் தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, மீண்டும் ஒருமுறை தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த முறை "ஓட்டுக்குக் காசு இல்லை" என்பதை மிகக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், அப்போதுதான் மக்களின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது தெரியவரும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

மீண்டும் தேர்தல் நடந்தால் விஜய் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் (Super Majority) வெற்றி பெற்று வருவார் என்று தான் கருதுவதாகவும் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். ஒருவேளை விஜய்யை முறியடிக்க வேண்டும் என்று திமுக மற்றும் அதிமுக நினைத்தால், அவர்கள் இருவரும் இணைந்து தேர்தலைச் சந்திக்கட்டும் என்றும் அவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். அதேபோல், தமிழகத்தில் பாஜக ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு சீட் கூட கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். மக்கள் மீண்டும் ஒருமுறை புதிதாகத் தங்களின் தலைவரைத் தீர்மானிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக உள்ளது.

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 234 இடங்களில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய இன்னும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக ஐந்து இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் தலா இரண்டு இடங்களைக் கொண்டுள்ள விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடனும் தவெக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்திருந்தாலும், மற்ற கட்சிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இதற்கிடையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோரியுள்ளார். இருப்பினும், விஜய்யின் ஆதரவுப் பட்டியலில் ஆளுநர் இன்னும் முழுமையான திருப்தி அடையவில்லை என்றும், அதனால் பதவியேற்பு விழா குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் ஆதரவு பலத்தைத் திரட்டுவதற்கான வேலைகளில் தவெக தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசியலில் நிலவும் இந்த இழுபறி நிலை, அடுத்த கட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.