தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்...பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தரிசனம்!

Tamil Selvi Selvakumar

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடிப்பூரத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. ஆடிப்பூர திருவிழாவில் முதல் நாள் இரவு 16 வண்டைி சப்பரமும், 5-ம் நாள் விழாவில் பெரிய பெருமாள், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோருக்கு உற்சவம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆடிப்பூர திருவிழாவின் உச்ச நிகழ்வான திருஆடிப்பூரத் தேரோட்டத்தில் ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றுவதற்காக மதுரை அழகர் கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு சாற்றிய பட்டு வஸ்திரம், பூமாலை  உள்ளிட்ட மங்கள பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரபட்டது. இன்று அதிகாலை ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருஆடிப்பூர தேரில் எழுந்தருளினர். ‘கோவிந்தா’ ‘கோபாலா’ கோஷம் முழங்கியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு ரத வீதிகளிலும் குவிந்தனர்.