தமிழ்நாடு

இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனை...நாங்கள் செய்துள்ளோம்...முதலமைச்சர் பெருமிதம்!

Tamil Selvi Selvakumar

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார் ஸ்டாலின்:

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று கரூர் மாவட்டம் சென்ற அவர், அரவக்குறிச்சி அருகே தடாகோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.  

ஒன்றரை லட்சம் இணைப்பு வழங்கியதாக பெருமிதம்:

தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலாவதாக 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது., அடுத்தப்படியாக தற்போது 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பானது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பானது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதில் எந்த மாநில அரசுகளும், இத்தகைய சாதனையைச் செய்ததில்லை என்று கூறிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் மின் உற்பத்தி வருகின்ற 2030-ஆம் ஆண்டில் 65 ஆயிரத்து 367 மெகா வாட் திறனாக மாறும் என்றார்.

சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்ற நடவடிக்கை:

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும், சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

முன்னதாக, விழாவில் உரையாற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இலவச மின் இணைப்பு கோரி, விண்ணப்பித்த விவசாயிகளுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.