தமிழ்நாடு

பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு - சக மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு!

கும்பகோணம் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழந்த நிலையில், பேருந்தை கவனக்குறைவாக ஓட்டிய ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tamil Selvi Selvakumar

அரியலூரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் பிஏ  படித்து வந்தார். இந்தநிலையில் அவர் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணித்ததாக கூறப்படுகிறது.

இதில் பேருந்து சாலையில் திரும்பியபோது, சதீஷ்குமார் எதிர்பாராத விதமாக மின்கம்பத்திலிருந்த விளம்பர பலகை மீது மோதி கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், பேருந்து ஓட்டுனரை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.