சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக, மாணவ மாணவிகள் சாலை மறியல்.
மாணவிகள் புகார்:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன், சிகரெட் புகையை முகத்தில் விட்டதாக மாணவிகள் ஆசிரியர்களிடம் புகார் அளித்தனர்.
விசாரணை:
இதையடுத்து ஆசிரியர்கள் திலீப் குமார், வெங்கடேசன், நித்தியானந்தம், பாண்டியன் ஆகியோர், சிகரெட் பிடித்த பள்ளி மாணவனை கண்டித்து அடித்துள்ளனர். இதைக்கண்டித்து மாணவனின் பெற்றோர்களும், உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இடை நீக்கம்:
இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் திலீப் குமார், வெங்கடேசன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்தும், நித்தியானந்தன் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரையும் பணியிடம் மாற்றம் செய்தும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
மாணவர்கள் போராட்டம்:
இந்நிலையில், தவறு செய்த மாணவனுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்த கல்வித் துறை அதிகாரிகளை கண்டித்து, மாணவ மாணவிகள் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சஸ்பெண்ட் செய்த ஆசிரியர்களை உடனடியாக பணியில் அமர்த்த கோரியும், பணியிட மாற்றம் செய்த ஆசிரியர்களை மீண்டும் தங்கள் பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் படிக்க: போதை பொருள் கடத்திய தம்பதிகள்..! வசமாக சிக்கிய சம்பவம்...!
பேச்சுவார்த்தை:
மாணவர்களுக்கு ஆதரவாக, பெற்றோர்களும் பொதுமக்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆரணி மாவட்ட கல்வி அலுவலர், போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.