தமிழ்நாடு

மருத்துவமனை கட்டடங்கள் குறித்த ஆய்வு கூட்டம்...! கட்டுமான பணிகள் குறித்து பேசிய அமைச்சர்...!

Malaimurasu Seithigal TV

அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், பொதுப்பணித்துறை மூலம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி (JICA) உதவியுடன் கட்டப்படும் மருத்துவமனைக் கட்டடங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி (JICA) மற்றும் மாநில நிதி பங்களிப்புடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நவீன சிகிச்சைக்கான கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.477.70 கோடி மதிப்பீட்டில், சென்னை கீழ்ப்பாக்கம் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை - அரசு இராஜாஜி மருத்துவமனை, சேலம் மாவட்டம் அம்மாபேட்டை- அரசு மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்டம் - கண்டியப்பேரி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி - அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் - அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்