"திடீரென வந்த மறைவு செய்தி.." - வி.எஸ். பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி! 
தமிழ்நாடு

"திடீரென வந்த மறைவு செய்தி.." - வி.எஸ். பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி!

"திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என இரங்கல்.

Antony Ajay R

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று பிற்பகலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வி.எஸ்.பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.