தமிழ்நாடு

டிராஃபிக் போலீஸின் உடலை சுமந்து சென்ற கண்காணிப்பாளர்... இறுதி ஊர்வலத்தில் நெகிழ்ச்சி... 

கொடைக்கானல் சாலை விபத்தில் உயிரிழந்த  டிராபிக் போலீஸின் உடலை இறுதி ஊர்வலத்தில் சுமந்து சென்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவுத்தன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி கொடைக்கானலில் டிராஃபிக் போலீஸாக பணியாற்றி வந்தார். கொடைக்கானலில்  பணியின் போது தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாலசுப்பிரமணி, நிலை தடுமாறியதால்  ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார்.

இச்சம்பவம் காவலர்கள் மற்றும்  பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரது சொந்த ஊரான மாவூத்தன்பட்டிக்கு  அடக்கம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸில்  இருந்து இறக்கப்பட்ட அவரது உடலை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா, இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி உள்ளிட்ட போலீஸார் எரியூட்டும் இடம் வரை சுமந்து வந்தனர்.

பின்னர் பாலசுப்ரமணி உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சக போலீஸாரின்  உடலை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் இணைந்து சுமந்து வந்து இறுதி மரியாதை செலுத்தியது அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.