தமிழ்நாடு

 "நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோரை சஸ்பெண்ட் செய்வது பாஜகவின் பயத்தை காட்டுகிறது" தமிழக ஆம் ஆத்மி!

Malaimurasu Seithigal TV

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோரை சஸ்பெண்ட் செய்வது பாஜகவின் பயத்தை காட்டுகிறது தமிழக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநில  கலவரம் மற்றும் பழங்குடியின பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து   ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் வசீகரன் தலைமையில் சென்னை தியாகராயநகர் பேருந்து பணிமனை எதிரில் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தின் போது மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை  எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாகவும், தேர்தலுக்காக இத்தகைய அரசியலை பாஜக செய்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும்  உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வது பாஜகவின் பயத்தை காட்டுவதாக தெரிவித்த அவர், மணிப்பூர் குக்கி இன சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவுள்ள நடைப்பயணத்தை தடைச்செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்த அவர், தடையை மீறி சென்றால் அண்ணாமலையை கைது செய்யவேண்டும் எனக்கூறினார். பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக எப்போதும் கையில் எடுக்கும் என்றும், நடைப்பயணத்தில் கலவரம் ஏற்படுத்துவார்கள் எனவும் குறிப்பிட்ட அவர், ஊழலை எதிர்த்து பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை எனக் கூறினார்.