அனுமதி இன்றி எடுத்த விடுப்புக்கு, நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றிய இளங்கோவன், 2006 முதல் 2008 வரை 117 நாட்கள் விடுப்பு எடுத்து சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏழு முறை பயணம் செய்ததாகவும், முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்ததுடன் ஒரு லட்சத்து 2916 ரூபாய் ஊதியமாக பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இளங்கோவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மனுதாரர் இளங்கோவன் விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளதால், அதனை அனுமதியின்றி விடுப்பு எடுத்ததாக கருத முடியாது என்றும் நிர்வாகம் ஊதியம் வழங்கினால் அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது என்றும் கூறி, இளங்கோவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் வெளிநாடு பயணம் சென்றிருந்தால் அதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதை விடுத்து மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.